Wednesday, April 15, 2015

பெற்றோரும் டீன் ஏஜ் பிள்ளைகளும்

பெற்றோரும் டீன் ஏஜ் பிள்ளைகளும்
சமுதாயத்தின் பலம் பொருந்திய உறவு முறைகளில் மிகவும் மேலானது பெற்றோர்
பிள்ளைகளுக்கிடையே உள்ள இரத்த உறவு பந்த பாசம்தான். எந்த உறவுமுறை
வேண்டுமானாலும் கைகோர்க்கலாம். கையைத துண்டித்தும் விடலாம். ஏன்
கணவன்-மனைவி கூட இன்றைய காலகட்டத்தில் செல்லாக் காசுகள்தான்.ஆனால்
பெற்றோர், பிள்ளை உறவு என்பது அப்படிப்பட்டதல்ல.
இன்றைய யுகத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பெற்றோரும் டீன் ஏஜ் என்ற பருவ
வயதினரை தமது இதயத்தில் இமய மலையாக வைத்துச் சுமக்கின்றனர்.

பிள்ளைகள் வயதுக்கு வந்தது முதல் பருவ, பாலியல் ரீதியான மாற்றங்கள்
ஏற்பட்டாலும் 13 வயது தொடக்கம் 20 வயது வரையுள்ள கால கட்டத்தை டீன் ஏஜ்
என்று குறிப்பிடுவர். அதிலும் நடுப்பகுதி மிகவும் உக்கிரமானது. 13
தொடக்கமே மெது மெதுவாக பல எண்ணங்கள், செயற்பாடுகள் ,உடல் ரீதியான
மாற்றங்கள், அதிகளவு எதிர்பார்ப்புகள், மேலதிக கனவு, கற்பனை இப்படி பல
விடயங்களைச் சுமந்து உலாவரும் இவர்களின் இளமை வயதுக்கு பெற்றேர்களின்
அறிவுரைகள் கசாயம் குடிப்பதற்குச் சமனாக இருக்கும்.

சகல பொறுப்புகளுக்கும் சொந்தக்காரரான பெற்றோருக்கு பிள்ளைகளின் இந்த டீன்
ஏஜ் காலம் மிகவும் தலையிடியான காலகட்டம்தான் (ஆனால் எல்லாப் பிள்ளைகளும்
பெற்றோருக்கு தலைப்பாரத்தைக் கொடுப்பவர்களல்லர்)உடல் ரீதியான
சிலமாற்றங்கள், உள ரீதியான பல மாற்றங்கள் அவர்களுக்கு என்று ஒரு தனியான
உலகத்தில் கொஞ்சம் குழப்பத்துடன் திணறுவது.. இவற்றையெல்லாம் யாரிடம்
பகிர்ந்து கொள்வது என்ற ஏக்கம் - எதிர்பார்ப்பு அதுவே எரிச்சலாக மாறி
பெற்றவர்களிடம் கடுப்பைக் காட்டலாம். எரிந்து விடத் தூண்டலாம். இவர்கள்
விலகிச் சென்றாலும் பெற்றோர் நெருக்கத்துடன் செயற்பட வேண்டும்.

இவர்கள் தம்மைத் தனிமைப்படுத்தி தனக்கென்று தனி உலகை அமைத்து அந்த பால்
வயதினரிடையே அதிக தொடர்புகளை, நெருக்கங்களை வைத்துக் கொள்வார்கள்.
எல்லாவற்றையுமே அலட்சியம் செய்யும் இந்தப் பருவத்தினர் நெருப்பு சுடும்
என்றாலும் பரீட்சித்துப் பார்க்க நினைப்பார்கள். அவர்களின் வயதே ஒரு
நெருப்புத்தான். அணைக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

எல்லா வயதினரும் ஒரே மாதிரியானவர்களல்லர். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு
விதம்-ரகம். இவர்களும் இவர்கள் பாடுமாக இருக்கிறார்களென்று நினைத்து
விடக் கூடாது. முடிந்தளவு இவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

பெற்றோர்கள் இவர்களுடனான நெருக்கத்தை அதிகரித்து அதிகளவு அதிகாரத்தைப்
பிரயோகிக்காமல் நண்பர்களைப் போல் பழக வேண்டும் சமுதாயத்தின் நெளிவு
சுழிவுகள்- ஆண், பெண் நட்புகள்- வயதுக் கவர்ச்சிகள்- போதை மற்றும்
பாலியல் சம்பந்தமான சில அறிவுரைகளும் பல எச்சரிக்கைகளும் செய்யலாம்.
இந்த விஞ்ஞான யுகத்தில் தொலைத் தொடர்பு சாதனங்களின் அதிக கவர்ச்சி,
தகவல், தொழில் நுட்பங்களின் பெருக்கத்தினால் ஏற்பட்ட (பெரும்பாலும்)
கலாசார, பண்பாடுகளின் சீரழிவு- நடை, உடை பாவனைகளின் அதிகளவு மாற்றங்கள்,
மோகங்கள் பலவிதமான போதைப் பாவனைகள் இளம்பராயத்தினரை ஆட்சி செய்து
வாழ்க்கையில் வீழ்ச்சி காண வைப்பது போன்ற பல பயங்கர சவால்களுக்கு இந்தப்
பெற்றோர் சமுதாயத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

ஆகவே, இந்த வயதினர் சீரழிவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. வயதுக்கு
வந்தவுடன் ஏற்படும் இந்த பாலியல் ரீதியான மாற்றங்கள் ஆண் பெண்ணையோ- பெண்
ஆணையோ பார்க்கும்போது ஏற்படும் ஒருவிதக் கிளர்ச்சி, மோகம் இந்த
மாற்றங்கள் சத்தமில்லாமல் தப்புப் பண்ணத் தூண்டும். அதிலும் கையடக்கத்
தொலைபேசி, இன்டர்நெட் மூலமாக பல பயங்கர விளைவுகள் பரந்து காணப்படுகின்றன.
நல்லவற்றினை விட்டு விட்டு தேவையற்றதைத் தேடும் இவர்களின் தேடல்களின்
போது பெற்றோரின் அறிவுரை சாத்தானின் வேதமாகத்தான் காணப்படுகின்றது. எல்லா
வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கத்தான் வேண்டும். ஆனால், ஒரு வரையறை
வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை அறியாமலே தவறிழைத்துக் கொண்டு போகலாம்.
சந்திக்கும் சவால்களை விட உள்வாங்கப்படும் அனர்த்தங்கள்தான் அதிகம்.
பெற்றோர்களும் தமக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்களென்பதை இவர்கள்
புரிந்து கொள்வதோடு தம்மைக் கண்காணித்து காவல் காக்கிறார்கள் என்ற
எச்சரிக்கை உணர்வும் இருக்க வேண்டும்.
பெற்றோரின் அறிவுரைகளை ஏற்க மறுக்கும் இந்த டீன் ஏஜ் வயதினருக்கு
ஆசிரியர் மூலமாகவும் நல்ல நண்பர்கள் மூலமாகவும் அறிவுரை என்ற பானத்தை
பருகக் கொடுக்கலாம். எல்லாவற்றையும் விடப் பெற்றோர்களே உற்ற
நண்பர்களாகவும் ஆலோசகர்களாகவும் பல விடயங்களை ஒளிவுமறைவின்றி
பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களின் போக்கிலே போய் தட்டிக்
கொடுக்கவும் வேண்டும். தட்டிக் கேட்கவும் வேண்டும். ஆனால் பெற்றவர்களைக்
குற்றம் சொல்ல முடியாது எந்தளவுக்குத்தான் கண்களில் விளக்கெண்ணெய்
விட்டுப் பாதுகாப்பார்கள்?நிஜம் என்று நம்பி நிழலை விழுங்கிக் கொள்ளும்
வயது. நீருக்கும் சேற்றுக்கும் வேற்றுமை அறியாத வயது. கைகளை நம்பி
கண்களைப் பறிகொடுக்கும் வயது. கூரிய கத்திமுனையும் டீன் ஏஜ் பருவமும்
ஒன்றுதான். பெற்றோர் இவர்கள் விடயத்தில் சற்று விழிப்புடன் இருந்தால்
இவர்களை நல்வழிப்படுத்த முடியும்.நன்றி:
Thanks:fathimanaleera.blogspot.com

No comments:

Post a Comment