Wednesday, April 15, 2015

பெண்ணின் நன்மதிப்பு

பெண்ணின் நன்மதிப்பு
இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமையோ நன் மதிப்போ இல்லை என்ற ஒரு
பிரச்சாரத்தை இஸ்லாத்தின் எதிரிகள் இடைவிடாமற் செய்து வருகிறார்கள்.
இஸ்லாத்துக்கெதிரான தமது சதித் திட்டங்கள் வெற்றியடைய இஸ்லாத்தின்
எதிரிகள் விரித்த மாய வலையே இது.



இன்றளவும் இதர சமுதாயங்களில் பெண்களுக்குக் கிடைத்திராத, இதர மதங்கள்
பெண்களுக்கு அளித்திடாத உரிமைகளையும் பெருமைகளையும் இஸ்லாம் பெண்களுக்கு
வழங்கியுள்ளது. ஏனைய மதங்களிலும் சமுதாயங்களிலும் மறுக்கப்பட்டு வந்த
உரிமைகளையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்களுக்கு
வழங்கியிருக்கின்றது. இதுவே உண்மை; இதற்கு வரலாறு சாட்சி.




இஸ்லாத்துக்கு முன்னர் பெண்களின் நிலை



இஸ்லாத்துக்கு முன்னர் ஜாஹிலிய்யாக் காலம் என்றழைக்கப்படும் மௌட்டீக கால
அரேபியாவில் பெண்கள் மிகவும் இழிவானவர்களாகவே கருதப்பட்டனர். அவளது
உரிமைகள் பறிக்கப்பட்டன; ஆண்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு
கேளிக்கைப் பொருளாகவே கருதப்பட்டு வந்தாள். ஒரே பெண்ணைப் பல ஆண்கள்
திருமணம் முடிக்கக் கூடிய ஒரு கீழ்த்தரமான நிலையே காணப்பட்டது. இதனை நபி
(ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு
விபரிக்கிறார்கள்:



“அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.



முதல் வகை, இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்.
ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ
பெண் பேசி ‘மஹர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.



இரண்டாம் வகைத் திருமணம், ஒருவர் தம் மனைவியிடம் நீ உன்
மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி
(அவர் மூலம் கருக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள்
என்று கூறிவிட்டு அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டும் அந்தக் கணவன்
விலகியிருப்பான். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொண்ட அந்த மனிதர் மூலம்
அவள் கருவுற்றிருப்பது தெரிகின்ற வரை கணவன் அவளை ஒரு போதும் தீண்ட
மாட்டான். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாள் எனத் தெரிய
வந்தால், விரும்பும் போது அவளுடைய கணவன் அவளுடன் உடலுறவு கொள்வான். குலச்
சிறப்பு மிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற அற்ப ஆர்வத்தினாலேயே இப்படிச்
செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஹ்’
(விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.



மூன்றாம் வகைத் திருமணம், பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர்
ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு
கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகிச் சில நாட்கள் கழியும்போது,
அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும்
மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது
அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். இப்போது எனக்குக்
குழந்தை பிறந்து விட்டது’ என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவனை நோக்கி
‘இவன் உங்கள் மகன் இன்னாரே’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள்
குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை
மறுக்க முடியாது.



நான்காம் வகைத் திருமணம், நிறைய மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி ஒரு
பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க
மாட்டாள்.



         இந்தப் பெண்கள் விலை மாதர்களாவர். அவர்கள் தங்களது வீட்டு
வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே அவர்களை
விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக்
கருத்தரித்துக் குழந்தை பிறந்தால் அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும்
அவளுக்காக ஒன்று கூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை –
பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் தந்தை எனக்
கருதிய ஒருவருடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள்.
அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று
பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால்
மறுக்க முடியாது.



சத்திய மார்க்கத்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது
இன்று மக்களின் வழக்கிலுள்ள முதல் வகைத் திருமணத்தைத் தவிர அறியாமைக்
காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்” [புகாரி: 5127].



இவ்வாறு தமது ஆசைக்குத் தீனி போடும் அணங்குகளாகப் பெண்களை நடத்திய
அதேவேளை பெண் குழந்தைகள் பிறப்பதையே துர்ச் சகுணமாகவும் பேரிழிவாகவும்
கருதினார்கள். ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் அன்றைய அறபிகளின் நிலைமை
எவ்வாறு இருந்தது என்பதைக் கீழ்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவாக
எடுத்துச் சொல்கிறது.



இவ்வாறு தமது ஆசைக்குத் தீனி போடும் அணங்குகளாகப் பெண்களை நடத்திய
அதேவேளை பெண் குழந்தைகள் பிறப்பதையே துர்ச் சகுணமாகவும் பேரிழிவாகவும்
கருதினார்கள். ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் அன்றைய அறபிகளின் நிலைமை
எவ்வாறு இருந்தது என்பதைக் கீழ்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவாக
எடுத்துச் சொல்கிறது.



وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ
كَظِيمٌ . يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ
أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلاَ سَاءَ مَا
يَحْكُمُونَ



அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயம்
கூறப்பட்டால் அவன் முகம் கருத்துவிடுகிறது; அவன் கோபமடைந்துவிடுகிறான்.
எதைக்கொண்டு நன்மாராயம் கூறப்பட்டானோ அதைத் தீயதாகக் கருதி அந்தக்
கெடுதிக்காகத் தன் சமூகத்தாரை விட்டும் ஒழிந்து கொள்கிறான். அதை இழிவோடு
வைத்துக்கொள்வதா அல்லது அதை உயிரோடு மண்ணில் புதைத்து விடுவதா என்று
குழம்புகிறான். அவர்கள் இவ்வாறெல்லாம் தீர்மானிப்பது மிகவும்
கெட்டதல்லவா” [அந்-நஹ்ல்: 58-59].



உயிர்வாழும் உரிமை



ஜாஹிலிய்யாக் காலத்தில் உயிர்வாழும் உரிமைகூட வழங்க மறுக்கப்பட்ட
வேளையிலேயே இஸ்லாம் பெண்ணுக்கு உயிர்வாழும் உரிமை வழங்கி கௌரவித்தது.
அனைத்து உரிமைகளையும் பற்றிப் பேசி இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அவளுக்கு
உயிர்வாழும் உரிமையே கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதை ஆழ்ந்து கவனித்து,
இஸ்லாத்தின் மீதுள்ள தமது காழ்ப்புணர்ச்சியை நீக்கிக்கொள்ள வேண்டும்.



பெண் குழந்தைகளை உயிரோடு குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருந்த
காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை புனித
இஸ்லாம் மதத்தையே சாரும். இவ்வாறு பெண்ணை இழிவுபடுத்தி உயிருடன்
புதைப்பது மாபெரும் தண்டனைக்குரிய குற்றம் என்று அல்லாஹ் அம்மக்களை
அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறான். மறுமையில் அக்குழந்தைகள்
எழுப்பப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படும் என்று கூறி இந்த
ஈனச் செயலைத் தடுத்து நிறுத்தியது. மனிதரைப் புனிதராக்க வந்த மார்க்கமே
இஸ்லாமாகும்.



இஸ்லாம் மார்க்கம் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையெல்லாம் நீக்கியது.
பெண்களை கண்ணியமான அழகிய மனிதப் பிறப்பே என்கிறது. அல்லாஹ் கூறுகிறான்,

 يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى
وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ
عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ



மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே
படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு, பின்னர்
உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். ஆகவே, உங்களில் எவர்
மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் அல்லாஹ்விடத்தில் மிக்க
கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன்; யாவற்றையும் சூழ்ந்து
தெரிந்தவன்” [அல்-ஹுஜ்ராத்: 13].





பெண்ணுக்கு ஆன்மா இருக்கிறது



ஆண்களுக்கு இருப்பது போன்றே ஒரு ஆன்மா பெண்களுக்கும் இருக்கிறது என்று
அல்-குர்ஆன் கூறுகிறது. அல்லாஹ் கூறுகிறான்,



يَا أَيُّهَا النَّاسُ اتَّقُواْ رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن
نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا
رِجَالاً كَثِيرًا وَنِسَاءً



மனிதர்களே, உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள்
யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும்
படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும் பெண்களையும்
பரவச் செய்தான்” [அந்-நிஸா: 1]. திருமறை தரும் இந்த விளக்கத்தின்படி
ஆண்களும் பெண்களும் படைப்பாலும் பிறப்பாலும் சமமானவர்களே.



அவளுக்கும் மறுமைப் பேறு உண்டு



நற்செயல்கள் புரிந்தால் அதற்காக வழங்கப்படும் நற்கூலிகள் ஆண்களுக்குக்
கிடைப்பது போலவே பெண்களுக்கும் கிடைக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்,



ஆதலால், அவர்களுடைய இறைவன் இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். உங்களில்
ஆணோ பெண்ணோ எவர் நற்செயல் செய்தாலும் அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க
மாட்டேன். ஏனெனில் ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பினும் நீங்கள் ஒருவர்
மற்றொருவரில் உள்ளவர்தாம்” [ஆல இம்றான்: 195].



அவ்வாறே, தீய செயல்கள் செய்தால், அதற்காக மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்
ஆண்களுக்குக் கிடைப்பது போலவே பெண்களுக்கும் கிடைக்கிறது. அல்லாஹ்
கூறுகிறான்,



لِيُعَذِّبَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ
وَالْمُشْرِكَاتِ



எனவே, முனாபிக்கான ஆண்களையும் முனாபிக்கான பெண்களையும், முஷ்ரிக்கான
ஆண்களையும் முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்”
[அல்-அஹ்ஸாப்: 73].

No comments:

Post a Comment